சென்னை: பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல்ஹாசன் தார் கொடுக்கவில்லை என அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. பெண் பேருந்து ஓட்டுநர். இவர் கோவை காந்திபுரம் முதல் சோமனூர் செல்லும் தனியார் பேருந்தில் பணிபுரிந்து வந்தார். இவர் வெகு விரைவில் பிரபலமடைந்தார்.
இதையடுத்து கோவை தெற்கு சட்டசபை உறுப்பினர் வானதி சீனிவாசன் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கடந்த வெள்ளிக்கிழமை காந்திரபுரத்தில் இருந்து ஹோப்ஸ் வரை பயணம் செய்தார்.
கனிமொழி பயணத்தின் போது அந்த பேருந்தில் பணியாற்றி வரும் பெண் பயிற்சி நடத்துநர் அன்னத்தாய், கனிமொழி எம்பியிடம் பேருந்து பயணத்திற்கு கட்டணம் கேட்டுள்ளார். கனிமொழி தனது பிஏ மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கனிமொழி ஹோப்ஸ் சாலை அருகே இறங்கிவிட்டார்.
ஆனால் தன்னை பார்க்க வந்த கனிமொழியிடம் அன்னத்தாய் டிக்கெட் பெற்றது ஷர்மிளாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஷர்மிளா, தானே டிக்கெட் கட்டணத்தை கொடுப்பதாக கூறியும் அதை கேட்காமல் அன்னத்தாய் ,எம்பியிடம் காசு கேட்டார். இதுகுறித்து அன்னத்தாயிடம் ஷர்மிளா கேட்டுள்ளார்.
இதையடுத்து நான் வேலையை விட்டு நிற்க போகிறேன் என ஷர்மிளா கூறியதாக தெரிகிறது. இதனிடையே உரிமையாளர் துரைகண்ணுவிடம் பெண் நடத்துநர், கனிமொழி எம்பியிடம் நடந்து கொண்ட விதம் குறித்து ஷர்மிளா புகார் கூறியுள்ளார். ஆனால் உரிமையாளரோ இதையெல்லாம் விளம்பரத்திற்காக இதையெல்லாம் செய்கிறாயா என கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கமல்ஹாசன், ஷர்மிளாவை வரழைத்து அவருக்கு வாடகைக் கார் ஓட்டுவதற்காக புதிய காரை பரிசளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஷர்மிளாவை சந்தித்து கமல்ஹாசன் பேசிய புகைப்படங்கள் வைரலாகின. இந்த நிலையில் ஷர்மிளாவுக்கு கார் கொடுத்தது அரசியல் லாபத்திற்காக என எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ஷர்மிளாவின் தந்தை கூறுகையில் கமல் சார் கார் கொடுக்கவில்லை. கார் வாங்குமாறு அட்வான்ஸ் பணமாக ரூ 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் சோர்வடையாமல் தைரியாக இருக்க வேண்டும் என ஷர்மிளாவிடம் கூறிய கமல், உங்களை போல் நிறைய பெண்கள் முன்னுக்கு வர வேண்டும் என கூறியதாக ஷர்மிளா தந்தை தெரிவித்தார்.