மூடப்படும் நூலகத்தின் புத்தகங்களைக் காக்கத் திரண்ட ஹைதராபாத் வாசகர்கள்
சாலை விரிவாக்கத்துக்காக மூடப்படும் ‘டேட் எ புக்’ நூலகத்தின் 12,000 புத்தகங்களை ₹10, ₹50 விலையில் வாங்க மூன்று நாள்களில் 500-க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.
ஹைதராபாத் கர்கானா பகுதியில் உள்ள ‘டேட் எ புக்’ நூலகமும் படிப்பகமும், மேம்பால விரிவாக்கப் பணிக்காக மூடப்படுகிறது. இதையடுத்து, புத்தகங்களை ₹10, ₹50 விலையில் விற்பதாக நிறுவனரின் மகன் வி.வி. ஹ்ருதய் கௌசிக் வாட்ஸ்அப்பில் அறிவித்தார்.
“கடந்த மூன்று நாள்களில் 500-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இவ்வளவு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை” என ஹ்ருதய் கூறினார். ஆசிரியர், மருத்துவர், மாணவர்கள், இல்லத்தரசிகள், ஓய்வுபெற்றோர் எனப் பல தரப்பினரும் திரண்டனர்.
விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யானந்த வல்லபிரகடா 2019-ல் தொடங்கிய இந்த நூலகத்தில், புனைவு, வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம், தத்துவம், குழந்தைகள் பிரிவு என சுமார் 12,000 தலைப்புகள் உள்ளன. கரோனாவுக்குப் பிறகு வருகை குறைந்ததால் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான படிப்பகத்தையும் அவர்கள் தொடங்கினர். உள்ளூர் நூலகங்கள் சமூகத்தின் முக்கியச் சொத்து என்பதை இந்த நிகழ்வு நினைவூட்டுகிறது.