‘பம்பையில் ஆடைகளை வீசாதீர்கள்’: சபரிமலை மேல்சாந்தி பக்தர்களுக்கு வேண்டுகோள்
பம்பை நதியில் ஆடைகளை வீசுவது ‘தவறான வழக்கம்’ என்று கூறிய சபரிமலை மேல்சாந்தி, நதியைத் தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் கடமை என வலியுறுத்தினார்.
சபரிமலை மேல்சாந்தி அரீக்கரா சுப்ரமணியன் சங்கரன் நம்பூதிரி, பம்பை நதியில் ஆடைகளை வீசுவதை ‘தவறான வழக்கம்’ எனக் குறிப்பிட்டு, அதை நிறுத்துமாறு பக்தர்களுக்கு நவம்பர் 28 அன்று வேண்டுகோள் விடுத்தார்.
“பம்பை நதியைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் அனைவருக்கும் தெரியும். ஆற்றில் ஆடைகளை வீசுவது போன்ற ஆரோக்கியமற்ற நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும். பம்பை நதி கங்கையைப் போன்றது; ‘பம்பா மாதா’ எனப் போற்றப்படுகிறது. நதியைத் தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் கடமை” என அவர் தெரிவித்தார்.
மண்டல – மகரவிளக்கு சீசனில் தமிழ்நாட்டிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்லும் நிலையில், தேவஸ்வம் போர்டின் பாதுகாப்பு மற்றும் தூய்மை வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.